என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காசி விஸ்வநாதர்"
- மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
- நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.
நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.
இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.
லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.
முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.
விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.
வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.
முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.
ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.
இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.
இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.
இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.
ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.
இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.
வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.
- பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.
- மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.
விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.
தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.
பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.
பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரெயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.
நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும். லோகமாதா அன்னபூரணி காசியம் பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.
கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார்.
இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோவில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோவில் எனப் பலகோவில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.
- ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
- கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.
மூலவர்: காசி விஸ்வநாதர்
அம்மன்/தாயார்: விசாலாட்சி
தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.
பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.
திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.
தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.
இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.
இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.
கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.
பிரார்த்தனை:
வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
- 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
- நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
சுவாமிமலை:
ஆடுதுறை மருத்துவ க்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோயில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை ( 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு கங்கை, யமுனா, கோதாவரி,சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள் உள்ளிட்ட 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
13-ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18-ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலமும், தொடர்ந்துநான்கு கால யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாச ந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரம்மாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கசுவாமி தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பேரூராதீனம் சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் துறவியர்கள், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்துறவியர்கள் உள்ளிட்ட சைவ, வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட துறவியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கிராம நாட்டான்மைகள், செயல் அலுவலர்கிருஷ்ண குமார், பக்தர்கள் செய்து ள்ளனர்.
- காசி விஸ்வநாதர் கோவிலில் ஆவணி மூல தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர் சமேத உலகம்மன் கோவிலில் ஆவணி மூல தெப்ப திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தெப்பத்தில் சுவாமி அம்பாள் நீராழி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- காசிவிஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் நடை பெறும். திருவிழாவில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், பிரியாவிடை தாயுடன் ரிஷப வாகனம், குதிரைவாகனம், பூதவாகனம், காமதேனு வாகனம், பூஊஞ்சல் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காசி விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக பெண்கள் 4 ரத வீதிகளிலும் கோலமிட்டும், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மேளதாளங்களுடன் 4 ரத வீதிகளிலும் விசுவநாதர்-விசாலாட்சி அம்மன்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிக அறிவுரை, 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
13-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 15-ந்தேதி காலை 7 மணிக்கு தை பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு வினாடி-வினா, 17-ந் தேதி இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நடன நிகழ்ச்சி, 21-ந் தேதி காலை நிறைவு விழா வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்